×

அமெரிக்க ஆப்பிள்களுக்கான 20% கூடுதல் இறக்குமதி வரி ரத்து; ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம்..!!

டெல்லி: அமெரிக்க ஆப்பிள்களுக்கான 20 சதவீத கூடுதல் இறக்குமதி வரியை ரத்து செய்த ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நெட் மற்றும் ஆப்பிள்களுக்கு கூடுதலாக விதிக்கப்பட்டு வந்த 20 சதவீத இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. பாதம் கொட்டைகளுக்கு கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் வீதம் விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கண்டனம் எழுந்துள்ளதுடன் குறிப்பாக காஷ்மீர் ஆப்பிள்களின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என எதிர்ப்பு எழுந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் மண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த நடவடிக்கையால் அமெரிக்க ஆப்பிள் இறக்குமதி மற்றும் விற்பனை எளிதாக நடக்கலாம். ஆனால், சிம்லாவில் ஆப்பிள்களுக்கான கொள்முதல் விலையை பெரும் தொழிலதிபர்கள் குறைத்துவிடுவார்கள். இங்கு பாதிக்கப்படும் ஆப்பிள் விவசாயிகளுக்கு யார் உதவி செய்வார்கள்? அரசு உதவுமா? அதே சமயம் அமெரிக்க விவசாயிகளுக்கும் யார் உதவி செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஒன்றிய அரசின் அறிவிப்பால் பெரும் தொழிலதிபர்கள் மட்டுமே பலனடைவார்கள் என கண்டனம் தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, அமெரிக்க அதிபர் பைடனை திருப்திப்படுத்த காஷ்மீரர்களின் ரத்தம் கண்ணீரால் சூழப்பட்ட ஒரு பரிசை பிரதமர் மோடி வழங்கியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். ஆப்பிள் விவசாயிகள் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டதாகும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதேபோல காஷ்மீரை சேர்ந்த பிற எதிர்க்கட்சிகளும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ஒன்றிய அரசு, கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவின் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 25 சதவீதம் மற்றும் 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்ததாக குறிப்பிட்டுள்ளது. அதற்கு பதிலடியாகவே அமெரிக்க ஆப்பிள்களுக்கு 2019ம் ஆண்டில் 20 சதவீதம் கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஆனால் தற்போது இந்திய எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான வரியை நீக்க அமெரிக்கா முன்வந்ததால், அமெரிக்க ஆப்பிள்களுக்கான கூடுதல் வரியை இந்தியாவும் நீக்கியுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

The post அமெரிக்க ஆப்பிள்களுக்கான 20% கூடுதல் இறக்குமதி வரி ரத்து; ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : US ,Union government ,congress ,Delhi ,Dinakaran ,
× RELATED சந்திரபாபு நாயுடுவுக்கு ஒன்றிய அரசு பாதுகாப்பு அதிகரிப்பு